போடியில், திருட்டு வழக்கில் வாலிபர் கைது; 16 பவுன் நகைகள் மீட்பு

போடியில் திருட்டு வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் 16 பவுன் நகை மீட்கப்பட்டது.

Update: 2018-12-31 22:30 GMT
போடி, 

போடி தாலுகா போலீஸ் நிலையத்திற்குட்பட்ட சில்லமரத்துப்பட்டி, கிருஷ்ணா நகர் மற்றும் போடி நகர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பூங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு 3 வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு 27 பவுன் நகை மற்றும் பணம் திருடு போனது. இந்த தொடர் திருட்டை கண்டுபிடிக்க போடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் போடி கிருஷ்ணா நகரில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் போடி தேவர் காலனியை சேர்ந்த மனோஜ்குமார் (வயது 27) என்பதும், போடி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் கூறிய தகவலின் பேரில் திருட்டு நகைகள் அடகு வைக்கப்பட்டு இருந்த கடைகளுக்கு போலீசார் சென்று 16 பவுன் நகைகளை மீட்டனர். மேலும் மனோஜ்குமாரிடம் இருந்து ரூ.20 ஆயிரத்தை மீட்டனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜ்குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஆரம்பத்தில் 27 பவுன் நகைகள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் தற்போது 16 பவுன் நகைகள் மட்டுமே மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்