கடிதம் எழுதும் வழக்கத்தை ஊக்குவிக்க 600 சமூகநல கடிதங்களை எழுதிய ஆர்வலர்

கடிதம் எழுதும் வழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் தாய்மொழி தமிழ்மொழியில் அழகிய எழுத்துக்களில் மக்கள் பிரச்சினைகள் குறித்த 600 சமூக கடிதங்களை சமூக ஆர்வலர் எழுதி உள்ளார்.

Update: 2018-12-31 23:10 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள அறநூற்றிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னபெருமாள்(வயது 49). 10–ம் வகுப்பு படித்துள்ள இவர் எல்.ஐ.சி. முகவராக பணியாற்றி வருகிறார். தனது 8 வயது வரை வாய் பேச முடியாமல் அவதிப்பட்ட இவர் அதன்பின்னர் முறையான பயிற்சி பெற்று பேச தொடங்கி உள்ளார். இவரின் கையெழுத்தின் அழகினை கண்ட ஆசிரியர்கள் குப்பாங்கோன், சிவபாண்டியன் ஆகியோர் அளித்த ஊக்கத்தின் பயனாக சின்னபெருமாள் அழகாக கணினி தமிழ் எழுத்துக்களைபோல எழுத தொடங்கி உள்ளார்.

இவர் தனது அழகிய எழுத்திற்கு செம்மொழி என்று பெயர் வைத்துள்ளார். தனது 11–வது வயது முதல் அச்சு எழுத்துக்களை போல எழுத தொடங்கிய சின்னபெருமாள் அழிந்து வரும் கடித தொடர்பினை உயிர்ப்பிக்க புது முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இதுகுறித்து சின்னபெருமாள் கூறியதாவது:– ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் முதல் தேதி உலக கடித தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கடிதம் எழுதுவதை தற்போது அனைவரும் மறந்துவிட்டனர். குறுந்தகவல், வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர் என்று தங்களின் கருத்துக்களை நவீன தொழில்நுட்பத்திற்கு மக்கள் மாற்றி கொண்டனர்.

இதன்காரணமாக மக்களிடம் தொன்மையான கடிதம் எழுதும் பழக்கத்தினை மீண்டும் உயிர்ப்பிக்கும் விதமாக நான் கடந்த ஜனவரி 14–ந் தேதி தைப்பொங்கல் நாளில் இருந்து கடிதம் எழுதி வருகிறேன். நாள்தோறும் நிகழும் மக்களின் பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்களாகவும், மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அதிகாரிகளுக்கும், துறையினருக்கும் பாராட்டு கடிதமாகவும், ஊக்குவிக்கும் கடிதமாகவும் எழுதி வருகிறேன்.

சமூகநலன், சமூக மேம்பாடு, தமிழ்மொழி வளர்ச்சி ஆகியவற்றில் தமிழ் கடிதத்தின் பங்கினை அறியச்செய்யும் வகையில் இதுவரை 600 கடிதங்களை எழுதி உள்ள நிலையில் வரும் தைப்பொங்கல் தினத்திற்குள் 1000 கடிதங்களை எழுதியும், 2019–ம் ஆண்டு உலக புத்தக தினத்திற்குள் 2,000 கடிதங்களும் எழுதி ஐ.நா. சபையில் தாக்கல் செய்வதே எனது லட்சியம். இவ்வாறு அவர் கூறினார். தாய்மொழியான தமிழ்மொழியை மிகஅழகாக எழுதும் மாணவர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறும் சின்னபெருமாள் மக்களிடையே எழுத்தின் வலிமையை எடுத்துச்சொல்லி தமிழ்மொழியில் அச்சுக்களைபோல எழுதும் வழக்கத்தை மீண்டும் உயிர்பெற செய்யும் வகையில் இந்த சாதனை முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்