வேதாரண்யம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் ஆலிவ் ரெட்லி ஆமைகள்

வேதாரண்யம் கடற்கரையில் ஆலிவ் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி கிடந்தன.

Update: 2019-01-01 23:00 GMT
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே புஷ்பவனம், கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, விழுந்தமாவடி உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன. வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை மீனவ கிராமத்துக்கு ஆண்டுதோறும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை ஆலிவ்ரெட்லி ஆமைகள் முட்டையிட வருகின்றன.

ஆழ்கடல் பகுதியில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணித்து கடற்கரைக்கு வரும் இந்த வகை ஆமைகள் கடற்கரையில் மண்ணை தோண்டி முட்டையிட்டு விட்டு மீண்டும் ஆழ்கடல் பகுதிக்கு பயணிக்கிறது. இந்த முட்டைகளை சிலர் தோண்டி எடுத்து விற்பனை செய்தனர். மேலும் கடற்கரைக்கு வரும் நாய்கள், மண்ணை தோண்டி முட்டைகளை சாப்பிட்டு செல்லும் நிலையும் இருந்தது.

எனவே ஆலிவ்ரெட்லி ஆமை முட்டைகளை பாதுகாக்க வனத்துறையினர் ஆண்டுதோறும் கடற்கரையில் இருந்து மண்ணை தோண்டி முட்டைகளை சேகரித்து கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை பகுதியில் உள்ள ஆமை குஞ்சு பொரிப்பகங்களில் வைத்து பாதுகாத்து வருகிறார்கள். இவ்வாறு பாதுகாக்கப்படும் ஆமை முட்டைகளில் இருந்து சுமார் 45 முதல் 55 நாட்களுக்குள் ஆமை குஞ்சுகள் வெளிவருகின்றன. பின்னர் ஆமை குஞ்சுகள் மீண்டும் கடலில் விடப்படும்.

இந்த நிலையில் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் கடற்கரை பகுதிக்கு முட்டையிட வந்த 10-க்கு மேற்பட்ட ஆலிவ் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி உள்ளன. ஆழ்கடல் பகுதியில் இருந்து கடற்கரைக்கு பயணித்தபோது விசைப்படகில் அடிபட்டு இந்த ஆமைகள் கரை ஒதுங்கி உள்ளன. கடற்கரை பகுதியில் இறந்து கரை ஒதுங்கிய ஆமைகளை ஏராளமான மக்கள் பார்த்து சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த ஆமைகளை சேகரித்து கடற்கரையில் குழிதோண்டி புதைத்தனர். இறந்து கரை ஒங்கிய ஆமைகள் சுமார் 40 முதல் 50 கிலோ எடையில் இருந்தன.

அழிந்து வரும் இனமான ஆலிவ் ரெட்லி ஆமைகளை பாதுகாக்க கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களின் படகுகளில் ஆமைகள் அடிபடாமல் இயக்க மீனவர்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்