ஆங்கில புத்தாண்டையொட்டி திருமூர்த்திமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்; பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்தனர்

ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2019-01-01 22:00 GMT
தளி,

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்குதொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இது ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். இங்கு பிரசித்திபெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒரு சேர ஒரே குன்றில் அருள்பாலித்து வருகிறார்கள்.

இந்த கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 900 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. இதனால் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழவும், அணைப்பகுதியை பார்வை யிடவும் தினந்தோறும் ஏராள மான சுற்றுலா பயணிகள்திருமூர்த்திமலைக்கு வந்து செல்கின்றார்கள்.

அந்த வகையில் நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்வதற்காகவும், மும்மூர்த்திகளை தரிசனம் செய்வதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கார், வேன் பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திருமூர்த்திமலைக்கு வருகை தந்்தனர். இதன் காரணமாக பஞ்சலிங்க அருவி பகுதியில் நேற்று காலை முதலே அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் வரிசையில் காத்திருந்து அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அதன் பின்னர் அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் மற்றும் அருவி பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

இடநெருக்கடி குறித்து திருமூர்த்திமலைக்கு வந்த பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறுகையில் “திருமூர்த்திமலைக்கு வருகின்ற இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளிடம் வாகன நிறுத்த கட்டணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை ஒப்பந்ததாரர்கள் வசூல் செய்து வருகின்றனர். ஆனால் வாகனங்களை நிறுத்துவதற்கு உண்டான இடவசதியை அவர்கள் ஏற்படுத்தி கொடுப்பதில்லை. இதனால் அணைப்பகுதி மற்றும் உடுமலை- திருமூர்த்திமலை சாலையின் ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி வருகின்றோம். அப்போது சாலையில் செல்கின்ற மற்ற வாகனங்களுக்கு இடநெருக்கடி ஏற்பட்டு நிறுத்தப்பட்டுள்ள வாகனத்துடன் மோதி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

அதைத்தொடர்ந்து ஒப்பந்தாரர்களிடம் சென்று வாகனங்களை நிறுத்துவதற்கு தேவையான இடவசதியை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. பார்க்கிங் வசதி செய்து தராமல் திறந்த வெளியில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிப்பது எந்த விதத்தில் நியாயமாகும்? திருமூர்த்திமலையில் பார்க்கிங் வசதி இல்லையென தெரிந்தும் ஒப்பந்ததாரர்கள் மூலமாக அதிகாரிகள் கட்டணம் வசூலித்து வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருமூர்த்திமலையில் ஆய்வு செய்து வாகனங்கள் நிறுத்துவதற்கு தேவையான இடவசதியை வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்தி தரவேண்டும்” என்று கூறினர்.

மேலும் செய்திகள்