மாவட்ட தலைவர் கைது: போலீஸ் வேனை மறித்து பா.ஜனதா கட்சியினர் மறியல் திருத்துறைப்பூண்டியில் பரபரப்பு

திருத்துறைப்பூண்டியில் பா.ஜனதா மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அந்த கட்சியினர் போலீஸ் வேனை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-01-01 23:00 GMT
திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை அருகே உள்ள பேட்டை கிராமத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலேரியா நோய் பரவாமல் தடுப்பதற்காக கடந்த 29-ந் தேதி தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் மாத்திரைகள் வழங்கப்பட்டன. அதை சாப்பிட்ட பேட்டை தட்டாரத்தெருவைச் சேர்ந்த சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களை முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர்களை பார்க்க சென்ற பா.ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் பேட்டை சிவா உள்ளிட்ட சிலருக்கும், மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர் அரவிந்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் டாக்டர் அரவிந்த் தாக்கப்பட்டார். காயம் அடைந்த அவருக்கு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மருத்துவமனையில் தன்னை தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்ததாக பேட்டை சிவா உள்ளிட்டோர் மீது டாக்டர் அரவிந்த் முத்துப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் பேட்டை சிவா உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் பேட்டை சிவாவை நேற்று போலீசார் கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்பு அவரை சிறையில் அடைப்பதற்காக போலீஸ் வேனில் ஏற்றினர். அப்போது கோர்ட்டு வாசலிலேயே போலீஸ் வேனை மறித்து பா.ஜனதா கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட தலைவரை கைது செய்ததை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்பு அங்கிருந்து ஊர்வலமாக சென்று திருத்துறைப்பூண்டி பழைய பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதை அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் குணா, ராஜேந்திரன் ஆகியோர் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

மேலும் செய்திகள்