மானாமதுரை பகுதியில் மணல் திருட்டு பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

மானாமதுரை பகுதியில் மணல் திருட்டு சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை தொடங்கியுள்ளது. இதில் மணல் திருட்டு கும்பலை விடுத்து மற்றவர்களை விசாரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2019-01-01 22:30 GMT

மானாமதுரை,

மானாமதுரை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மணல் திருட்டு அதிக அளவில் நடந்து வருகிறது. கல்குறிச்சி, ஆலங்குளம், கரிசல்குளம், வேதியேநேரந்தல், ராஜகம்பீரம், கால்பிரிவு, கீழப்பசலை உள்ளிட்ட பல்வேறு வைகை ஆற்றுப்படுகைகளை ஒட்டி உள்ள பகுதிகளில் மணல் திருட்டு நடந்து வருகிறது. இதனால் வைகை ஆற்றில் பெரிய அளவிலான பள்ளங்கள் உருவாகி உள்ளன. மணல் திருட்டை பெரும்பாலும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

இதுபற்றி தொடர்ந்து செய்திகள் படத்துடன் வெளிவந்தும், அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதாவது:– அதிகாரிகள் மணல் திருட்டு கும்பலிடம் நெருங்கிய நட்பு வைத்துள்ளதால், அவர்களை கண்டு கொள்வதில்லை. சமீபத்தில் சட்டவிரோத மணல் குவாரி குறித்து புகார் கொடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல், கோர்ட்டு உத்தரவிட்ட பின்பு தான், சில இடங்களில் குவாரிகள் முடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மானாமதுரையில் கல்குறிச்சி மற்றும் வேதியரேந்தலில், ராஜகம்பீரம் பகுதிகளில் குறிப்பிட்ட சிலர் மணல் திருட்டில் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் மேல் தொடர் புகார் வந்து சிப்காட் மற்றும் மானாமதுரை காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மணல் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டதால் இருவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வைகை ஆற்றில் தொடர்ந்து நீர் வரத்து இருந்ததால் மணல் திருட்டு குறைந்தது.

இந்தநிலையில் தற்போது மானாமதுரையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மணல் திருட்டு குறித்து விசாரித்து வருகின்றனர். அதில் மணல் திருட்டில் ஈடுபட்ட சிலரை வரவழைத்து வாக்குமூலம் வாங்கி வருகின்றனர். அதனை வீடியோவாகவும் பதிவு செய்து வருகின்றனர். இதில் முக்கிய நபர்களை விட்டு விட்டு, ஒருசிலரை மட்டும் பாரபட்சமாக விசாரிக்கின்றனர். எனவே மணல் திருட்டில் தற்போது ஈடுபடும், ஏற்கனவே ஈடுபட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்