பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை திருவள்ளூர் நகராட்சியில் கடந்த ஆண்டு ரூ.3¾ லட்சம் அபராதம்; நகராட்சி ஆணையர் தகவல்

திருவள்ளூர் நகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக ரூ.3¾ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-01 22:45 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் நகராட்சி ஆணையர் முருகேசன் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:–

தமிழகம் முழுவதும் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கவோ, பயன்படுத்தவோ தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின்பேரில் பிளாஸ்டிக் மாசில்லா திருவள்ளூரை உருவாக்கும் வகையில் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என அறிவுரைகள் வழங்கி பொதுமக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று உபயோகப்பொருட்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே போல் திருவள்ளூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட பள்ளி மாணவ–மாணவிகளுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு பேரணிகளும் நடத்தப்பட்டது.

அதோடு மட்டுமல்லாமல் திருவள்ளூர் நகராட்சியின் முக்கிய பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என விழிப்புணர்வு பேனர்களும் வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகளிடம் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

மேலும் கடந்த ஆண்டு பிளாஸ்டிக்கை பயன்படுத்தியதாக கடைக்காரர்களிடம் இருந்து 4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.3¾ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து இந்த ஆய்வு நடத்தப்படும், எனவே பொதுமக்கள் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து பிளாஸ்டிக் மாசில்லா திருவள்ளூரை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும். மீறி பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்