வங்கியில் ரூ.4 கோடியே 95 லட்சம் மோசடி: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மேலாளர், மனைவி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு

ஆலங்குடியில் உள்ள ஒரு வங்கியில் ரூ.4 கோடியே 95 லட்சம் மோசடி செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மேலாளர் மற்றும் அவருடைய மனைவி மீது சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-01-01 23:00 GMT
ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசமரம் பஸ் நிறுத்தம் அருகே ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியில் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2018-ம் ஆண்டு ஜனவரி வரை கிரண்பாபு என்பவர் மேலாளராக பணியாற்றினார். இவர் மேலாளராக இருந்த கால கட்டத்தில் விவசாய கடன் வழங்கியதிலும், பண நீக்க நடவடிக்கையின்போதும் பணம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந் நிலையில் கிரண்பாபு இடமாறுதலுக்கு முயன்றார். இதற்கிடையே மற்றொரு மேலாளர் அந்த வங்கிக்கு மாறுதல் ஆகி வந்தார். இவர் வங்கியில் பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளதாக, உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து வங்கி அதிகாரிகள் கிரண்பாபுவிடம் விசாரணை நடத்தியதில், கிரண்பாபு ரூ.4 கோடியே 95 லட்சம் மோசடி செய்ததும், அதற்கு அவருடைய மனைவி நிஷிபா உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி நிர்வாகம் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் கிரண்பாபுவை பணியிடை நீக்கம் செய்தது.

மேலும் இது குறித்து வங்கி நிர்வாகம் சார்பில் மத்திய புலனாய்வு பிரிவு(சி.பி.ஐ.) போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. புகார் தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கிரண்பாபு, அவருடைய மனைவி நிஷிபாவுடன் சேர்ந்து ரூ.4 கோடியே 95 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து கிரண்பாபு, நிஷிபா மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்