மாவட்டம் முழுவதும், ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

ஆங்கில புத்தாண்டை யொட்டி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

Update: 2019-01-01 22:30 GMT
நாமக்கல், 

உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் நகரை பொறுத்த வரையில் ஆங்காங்கே தெருக்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்தியும், கேக் வெட்டியும் பொதுமக்கள் ஆங்கில புத்தாண்டை கொண்டாடினர்.

புத்தாண்டையொட்டி நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் சாமி மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் சாமிக்கு அதிகாலை 4.30 மணியளவில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதன் பிறகு வெள்ளி கவசத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதேபோல் நரசிம்மசாமி கோவில், பாலதண்டாயுதபாணி சாமி கோவில், மாருதிநகர் ராஜகணபதி கோவில், அழகுநகர் மாரியம்மன் கோவில், பொன்விழாநகர் முத்துமாரியம்மன் கோவில் என நகர் முழுவதும் உள்ள கோவில்களில் நேற்று புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் பாலம் ரோட்டில் உள்ள புற்று மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு காவிரி தீர்த்தம் கொண்டு வரப்பட்டு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து இளநீர், தேன், பால் அபிஷேகம் நடைபெற்றது. சாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு பொங்கல், சுண்டல் வழங்கப்பட்டது.

பள்ளிபாளையம் காவிரி கரையில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில், ஓம்காளியம்மன் கோவில், வள்ளி, தெய்வானை பாலசுப்பிரமணியர் கோவில், வீரமாத்தி அம்மன், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், கண்ணனூர் மாரியம்மன் கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பரமத்தி வேலூர்

பரமத்தி வேலூர் வட்டாரத்தில் ஆங்கில புத்தாண்டை யொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கீரம்பூர் அருகே உள்ள தொட்டிப்பட்டியில் எழுந்தருளியுள்ள சாய்பாபா கோவிலில் நேற்று காலை மங்கள ஸ்நானமும், காலை ஆரத்தியும், சர்வசித்தி சங்கல்ப பூஜையும் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சாய்பாபா பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் பரமத்தி வேலூர் மகா மாரியம்மன், பஞ்சமுக விநாயகர், புதுமாரியம்மன், நன்செய் இடையாறு மகா மாரியம்மன், திருவேலீஸ்வரர், பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள், புதிய காசி விஸ்வநாதர், பச்சமலை முருகன் கோவில், கபிலர்மலை பாலசுப்ரமணிய சாமி, பிலிக்கல்பாளையம் விஜயகிரி ஆண்டவர், அனிச்சம்பாளையம் சுப்ரமணியர் உள்ளிட்ட கோவில்களில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாவட்டம் முழுவதும்

காளிப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தசாமி கோவில் வளாகத்தில் உற்சவர் முருகன் வள்ளி, தெய்வானையுடன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்