மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2019-01-02 23:00 GMT
கரூர்,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஈசநத்தம் பகுதியில் வேளாண்மைத்துறையின் சார்பில் அரசு மானிய உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்பிழியும் எந்திர மையம் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்திரனராக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, எண்ணெய்பிழியும் எந்திர மையத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

வேளாண்மைத்துறையின் நீடித்த நிலையான மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் திட்டத்தின் கீழ் அரவக்குறிச்சி உழவர் உற்பத்தியாளர் குழுவின் மூலம் ரூ.3.91 லட்சம் வழங்கப்பட்டு அதனோடு அரசு மானியமாக ரூ.10 லட்சம் பெறப்பட்டு மொத்தம் ரூ.13 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் இந்த மையம் அமைக்கப் பட்டுள்ளது.


இதில் எண்ணெய் பிழியும் எந்திரம், எண்ணெய் வடிகட்டும் எந்திரம் மற்றும் எண்ணெய் நிரப்பும் எந்திரம் ஆகிய எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. சுத்தமான, சுகாதாரமான முறையில் இங்கு கடலை உள்ளிட்ட பல்வேறு வகையான எண்ணெய் பிழிந்து தரப்பட உள்ளது. எனவே, விவசாயிகளும், பொதுமக்களும் இந்த மையத்தை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 கரூர் மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கானகத்துக்குள் கரூர் என்ற அடிப்படையில் அதிக அளவில் ஆலம், அரசு, பனை மற்றும் நாட்டு மரங்களை நடவு செய்ய இந்தத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. அத்துடன் பொதுமக்களும் அதிக அளவில் மரக்கன்றுகளை வளர்க்க ஆர்வம் காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜெயந்தி, வேளாண்மை பொறியியல்துறை செயல்பொறியாளர் ராஜ்குமார், உதவி இயக்குனர் கந்தசாமி அரவக்குறிச்சி வேளாண் உற்பத்தியாளர் குழு தலைவர் செல்வராஜ், கூட்டுறவு சங்கப்பிரதிநிதிகள் காளியப்பன், கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்