ஆரணியில் இடிக்கப்பட்ட பழைய மார்க்கெட்டை ஆக்கிரமித்து காய்கறி கடைகள் நகராட்சி பணியாளர்கள் அதிரடியாக அகற்றினர்

ஆரணியில் இடித்து அகற்றப்பட்ட பழைய காய்கறி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பாளர்கள் புகுந்து காய்கறி கடைகள் நடத்தியதை நகராட்சி பணியாளர்கள் போலீஸ் பாதுகாப்புடன் அதிரடியாக அகற்றினர்.

Update: 2019-01-02 23:00 GMT
ஆரணி,

ஆரணி காந்தி ரோட்டில் இருந்த காய்கறி மார்க்கெட் பராமரிப்பற்ற நிலையில் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் 3 கடைகள் இடிந்து விழுந்தன. எஞ்சிய கடைகளும் இடிந்து விழும் அபாயத்துடன் இருந்ததால் அங்கிருந்த வியாபாரிகளுக்கு நகராட்சி வளாகத்தின் உள்பகுதியில் தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைத்துக் கொள்ள இடம் ஒதுக்கித் தரப்பட்டது. அவர்கள் முறையாக நகராட்சிக்கு வரி மற்றும் வாடகை செலுத்தி வந்ததால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. நகராட்சி வளாகத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் பழைய மார்க்கெட்டில் கடை வைத்த வியாபாரிகளே கடைகளை கட்டினர். அதனை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதனிடையே பழைய மார்க்கெட்டில் உள்ள கடைகள் இடித்து அகற்றப்பட்டன. அவ்வாறு இடித்துத் தள்ளப்பட்ட பழைய மார்க்கெட் வளாகத்திலும், சந்தைமேடு பகுதியிலும் நேற்று ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் இடத்தை ஆக்கிரமித்து காய்கறிகளை பரப்பி வியாபாரம் செய்ய தொடங்கினர்.

இதன் காரணமாக நகராட்சி வளாகத்தில் காய்கறி கடை வைத்துள்ள வரி செலுத்தும் வியாபாரிகளுக்கு விற்பனை பாதிக்கப்படும் என்பதால் அவர்கள் அது குறித்து நகராட்சிக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், “பழைய மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பாளர்கள் காய்கறி வியாபாரம் செய்தால் எங்களுக்கு வியாபாரம் நடக்காது, நாங்கள் நகராட்சிக்கு முறையாக வாடகை செலுத்தி வருகிறோம். வாடகை செலுத்தாதவர்கள் ஆக்கிரமிப்பு செய்து அங்கு வியாபாரம் செய்வதால் எங்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது” என்றனர்.

அவர்கள் கூறியதில் உள்ள நியாயத்தை உணர்ந்த நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், வருவாய் ஆய்வாளர் தேவராஜ், கிராம நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோர் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து பழைய மார்க்கெட்டில் ஆரணி நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், கோவிந்தசாமி மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு நகராட்சி பணியாளர்கள் சென்று இடத்தை ஆக்கிரமித்து காய்கறி வியாபாரம் செய்தவர்களை அதிரடியாக அகற்றினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பானது. மீண்டும் இங்கு கடைவைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் எச்சரித்தனர்.

மேலும் செய்திகள்