அடிப்படை வசதி செய்து தரக்கோரி வகுப்பை புறக்கணித்து தனியார் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

அரக்கோணம் அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-02 22:30 GMT
அரக்கோணம், 

அரக்கோணம் அருகே தணிகை போளூர்-எம்.ஆர்.எப். தனியார் தொழிற்சாலைக்கும் இடையே தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல் மாணவ-மாணவிகள் வகுப்பிற்கு சென்றனர். சிறிது நேரம் கழித்து 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி முன்பாக தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அறிந்த கல்லூரி முதல்வர் பீட்டர், அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் தாலுகா போலீசாரும், கல்லூரி முதல்வரும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவர்கள் கூறுகையில், “கல்லூரியில் கணினி பிரிவிற்கு பேராசிரியர் இல்லை. இதனால் கணினி பாடத்தை படிக்க முடியவில்லை. மேலும் கல்லூரியில் சில அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை. இந்த பிரச்சினைகளை தீர்க்க கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். கல்லூரி முதல்வர் பீட்டர் மாணவர்களிடம், இதுகுறித்து நிர்வாகத்திற்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து வகுப்பிற்கு சென்றனர்.

மேலும் செய்திகள்