புயலால் பாதிக்கப்பட்ட புஷ்பவனம் பகுதியில் சேற்றை அகற்றி, கடலில் கொட்டும் பணி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புஷ்பவனம் பகுதியில் தேங்கியுள்ள சேற்றை பொக்லின் எந்திரம் மூலம் அகற்றி கடலில் கொட்டும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2019-01-02 22:45 GMT
வேதாரண்யம்,

கஜா புயலால் வேதாரண்யம், புஷ்பவனம், ஆறுகாட்டுதுறை, வெள்ளப்பள்ளம், சிறுதலைகாடு ஆகிய மீனவ கிராமங்களில் மீன்பிடி படகுகள், வலைகள் முற்றிலும் சேதம் அடைந்தன. இந்தநிலையில் சேதமடைந்த படகுகளுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகை சரிவர அனைவருக்கும் கிடைக்காததாலும், தங்கள் படகுகளை சரி செய்ய முடியாததாலும் புயலால் தூக்கி வீசப்பட்ட படகுகள் இன்னமும் ஆங்காங்கே சிதறிகிடக்கின்றன. இதனால் 50 நாட்களாக மீன்பிடிக்க செல்லமுடியாததால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், படகுகளை சரி செய்து கடலுக்கு செல்ல இன்னும் 1 மாதம் ஆகும் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.

புஷ்பவனம் மீனவ கிராமத்தில் புயலின் போது கடும்காற்றுடன் கடலில் இருந்து சேறும் வந்து கடற்கரையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் வந்து நிரம்பிவிட்டது. இதனால் படகுகள், வீடுகள், விவசாயநிலங்கள் என அனைத்தும் சேற்றில் சிக்கியுள்ளன. சேற்றில் சிக்கிய படகுகளில் ஒரு சில படகுகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட படகுகளும் சேதம் அடைந்துள்ளதால் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை உள்ளது. இதையடுத்து புஷ்பவனம் பகுதியில் தேங்கியுள்ள சேற்றை பொக்லின் எந்திரம் மூலம் அகற்றி கடலில் கொட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கிராம பஞ்சாயத்தார் காளியப்பன் கூறியதாவது:-

சேற்றை அகற்றும் பணி சவாலாக உள்ளதால் அரசு கூடுதலான எந்திரங்களை பயன்படுத்தி விரைவில் அகற்றிதரவேண்டும். படகுகளுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகை போதுமானதாக இல்லை. எனவே கூடுதலாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்