நடைபயிற்சி சென்ற மூதாட்டியை கீழே தள்ளி 9 பவுன் நகை பறிப்பு; சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு

நடைபயிற்சி சென்ற மூதாட்டியை கீழே தள்ளி 9 பவுன் நகையை பறித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-01-02 23:45 GMT

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. காலனியை சேர்ந்தவர் ராஜன். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 64). இவர், நங்கநல்லூர் ஸ்டேட்பேங் காலனியில் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் நடந்து வந்த வாலிபர், திடீரென மூதாட்டி விஜயலட்சுமியின் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறிக்க முயன்றார். சுதாரித்துக்கொண்ட விஜயலட்சுமி, நகையை பறிக்க விடாமல் கொள்ளையனை தடுத்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையன், மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு, அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறித்தான். பின்னர் ஹெல்மெட் அணிந்தபடி அங்குவந்த தனது கூட்டாளியுடன் மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டார்.

இதுபற்றி பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களை தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் மூதாட்டியிடம் கொள்ளையன் நகையை பறித்துவிட்டு தப்பிச்செல்லும் கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ காட்சிகளை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

முன்பெல்லாம் தனியாக நடந்து செல்பவர்களிடம் மர்மநபர்கள் மோட்டார்சைக்கிளில் வந்து நகைகளை பறித்து சென்றனர். தாங்கள் மாட்டிக்கொள்ளாமல் இருக்க ஹெல்மெட்டும் அணிந்தபடி வந்தனர்.

ஆனால் தற்போது நகை பறிப்பு கொள்ளையர்கள், ஹெல்மெட் அணியாமல் சர்வசாதாரணமாக நடந்து வந்து மூதாட்டிகளை குறி வைத்து இதுபோல் நூதன முறையில் நகையை பறித்துவிட்டு, தங்கள் கூட்டாளிகளுடன் தப்பிச்செல்லும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. இதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்