தூத்துக்குடி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு எதிர்ப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் மீது 107-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-02 22:15 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி பண்டாரம்பட்டியை சேர்ந்தவர் வசந்தி. இவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இவர் மீது ஏற்கனவே 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்தநிலையில் அவர் பொது மக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிப்பதை தடுக்கும் வகையில் குற்ற விசாரணை நடைமுறை சட்டப்பிரிவு 107-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நேற்று உதவி கலெக்டர் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை அவருடைய வீட்டில் ஒட்டப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து நேற்று மாலையில் வசந்தி மற்றும் பண்டாரம்பட்டியை சேர்ந்த மக்கள் சிலர் உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் வசந்தி மீது போடப்பட்ட 107 -வது பிரிவு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.

அப்போது, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது 107-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அரசின் குரல் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதுதான். அதைத் தான் நாங்களும் கூறுகிறோம். இனிமேல் யார் மீதும் 107-வது பிரிவில் வழக்கு பதிவு செய்யக்கூடாது. அவ்வாறு வழக்கு பதிவு செய்யப்பட்டால், போராட்டத்தை ஒடுக்கும் விதமாக போலீஸ் துறை செயல்படுவதை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். 107-வது பிரிவு வழக்கை ரத்து செய்ய வேண்டும் இல்லையென்றால் பண்டாரம்பட்டியில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினர்.

இதைத் தொடர்ந்து உதவி கலெக்டர் சிம்ரான்ஜித் சிங் கலோன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேசினார். அப்போது, இந்த 107-வது பிரிவு வழக்கு தொடர்பான விளக்கங்களை அளிக்குமாறு தெரிவித்தார். அதன் அடிப்படையில் உரிய பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தார். அதன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்