புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்து பண மோசடி செய்ததாக டி.வி. நடிகர் மீது வழக்கு

ஜூகு ஓட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்து பணமோசடி செய்ததாக டி.வி. நடிகர் ராகுல்ராஜ் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2019-01-02 23:20 GMT
மும்பை,

ஜூகு ஓட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்து பணமோசடி செய்ததாக டி.வி. நடிகர் ராகுல்ராஜ் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஓட்டலில் ரகளை

மும்பையை சேர்ந்த டி.வி. நடிகர் ராகுல்ராஜ் சிங். இவர் ஜூகுவில் உள்ள ஒரு ஓட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார். அதில், இந்தி பட பாடகர் அங்கித் திவாரி பங்கேற்பதாக கூறி, ஆன்லைன் மூலம் பலரிடம் நுழைவு கட்டணமாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு பாடகர் அங்கித் திவாரி வரவில்லை. இதனால் கோபம் அடைந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் ஓட்டலில் திடீர் ரகளையில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் அங்கிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி சூறையாடினர்.

வழக்குப்பதிவு

இதற்கிடையே ராகுல்ராஜ் சிங் ஓட்டலுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தையும் செலுத்தாமல் அங்கிருந்து கிளம்பி விட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக டி.வி. நடிகர் ராகுல்ராஜ் சிங் மீது புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வந்தவர்களிடம் பணம் வசூலித்தும், ஓட்டலுக்கு பணம் கொடுக்காமல் மோசடி செய்து விட்டதாக சாந்தாகுருஸ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி ராகுல்ராஜ் சிங் கூறுகையில், ‘‘900 பேருக்கு உணவு மற்றும் மது வகைகள் தேவையான அளவுக்கு வழங்க ஓட்டலில் ஆர்டர் செய்திருந்தேன். இதற்காக ஏற்கனவே அந்த ஓட்டலுக்கு ரூ.18 லட்சம் கொடுத்து விட்டேன்.

ஆனால் நள்ளிரவுக்கு பின் அவர்கள் உணவு மற்றும் மது கொடுப்பதை நிறுத்தி விட்டனர். இதனால் கோபம் அடைந்து அங்கிருந்தவர்கள் ரகளை செய்தனர்’’ என்றார்.

மேலும் செய்திகள்