அதிகாரியை உள்ளே அடைத்து வைத்து கிராம நிர்வாக அலுவலகத்தை பூட்டி பொதுமக்கள் போராட்டம் மத்தூர் அருகே பரபரப்பு

மத்தூர் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரியை உள்ளே அடைத்து வைத்து கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-01-02 21:30 GMT
மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே கே.எட்டிப்பட்டி கூட்ரோடு பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் அவ்வப்போது போராட்டம், சாலைமறியல், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இங்குள்ள டாஸ்மாக் கடையை கூரம்பட்டி கிராமத்திற்கு மாற்ற உள்ளதாக தகவல் பரவியது.

இது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர். மேலும் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நேற்று கிராம நிர்வாக அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கிராம நிர்வாக அலுவலர் காளிதாசை உள்ளே அடைத்து வைத்து அலுவலகத்தை பூட்டினர்.

மேலும் பொதுமக்கள் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சாமல்பட்டி போலீசார் மற்றும் தாசில்தார் மாரிமுத்து ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கூரம்பட்டியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து: கலைந்து சென்றனர். இதைத் தொடர்ந்து அலுவலகத்தை திறந்து கிராம நிர்வாக அலுவலரை போலீசார் மீட்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்