தஞ்சை நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பு தரையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்

தஞ்சை நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பு 20 சதவீதம் ஈரப்பதம் வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தி தரையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-03 23:00 GMT
தஞ்சாவூர்,


தஞ்சையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மாவட்ட செயலாளர் சுந்தரவிமலநாதன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கையில் நெற்கதிர்களையும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட நெல்லையும் தரையில் கொட்டி கோ‌ஷங்கள் எழுப்பினர். அப்போது அவர்கள், தமிழக அரசு ஆண்டு தோறும் சம்பா நெல் அறுவடை காலத்தில் வேளாண்மைத்துறை, உணவுத்துறை, விவசாயிகள் அடங்கிய முத்தரப்பு கூட்டத்தை நடத்துவது வழக்கம். இந்த கூட்டத்தில் கொள்முதல் கொள்கை முடிவுகள் எடுக்கப்படும். ஆனால் இந்த கூட்டத்தை கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசு கூட்டுவதில்லை.எனவே உடனடியாக விவசாயிகள் தங்களுடைய கருத்துகளை எடுத்துரைக்க ஏதுவாக முத்தரப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்.


விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதில் நுகர்பொருள் வாணிபகழகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதால் விவசாயிகள் வேறு வழியின்றி தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே நெல் கொள்முதலில் நிர்வாகம் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

கஜா புயல் தாக்குதலில் சம்பா நெல் மகசூல் 45 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் கடுமையான பனிப்பொழிவால் நெல் ஈரமாகி உள்ளது. இந்த நிலையில் அறுவடையான நெல்லில் ஈரப்பதம் 17 சதவீதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.

ஆந்திராவில் பெய்ட்டி புயல் தாக்கியதால் அங்குள்ள விவசாயிகளின் நெல் அனைத்தையும் அரசு எந்தவித நிபந்தனையுமின்றி கொள்முதல் செய்ய வேண்டும் என அந்த மாநில முதல்–மந்திரி உத்தரவிட்டதை போல, தமிழக முதல்–அமைச்சரும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் என கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்