திருச்சி விமானநிலையத்தில் அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் மோதல் சோதனையின்றி மலேசியா பறந்த 130 பயணிகள்

திருச்சி விமானநிலையத்தில் அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து சுங்க அதிகாரிகள் சோதனையின்றி 130 பயணிகள் மலேசியா சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-01-03 23:00 GMT
திருச்சி,

திருச்சி விமானநிலையத்தில் பயணிகளிடம் சோதனை நடத்தும் சுங்கத்துறையினருக்கு நுழைவுக்கான அனுமதி அட்டை (பாஸ்) வழங்கப்பட்டு இருக்கும். இந்த அனுமதி அட்டையை மாதந்தோறும் அவர்கள் முறைப்படி விண்ணப்பித்து புதுப்பித்து கொள்ள வேண்டும். இந்தநிலையில் திருச்சி விமானநிலையத்தில் பணியாற்றி வந்த சுங்க அதிகாரிகள் 8 பேருக்கான அனுமதி அட்டையின் தேதி காலாவதியாகி இருந்தது.

ஆனால் அவர்கள் நேற்று காலை வழக்கம்போல் விமானநிலையத்துக்கு பணிக்கு வந்தனர். அவர்களிடம் புதுப்பிக்கப்பட்ட அனுமதி அட்டை இல்லாததால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் சுங்க அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் விமான நிலைய நுழைவு வாயிலில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினருக்கும், சுங்க அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. புதிய அனுமதி அட்டை கொண்டு வந்தால் தான் உள்ளே செல்ல விடுவோம் என்று தொழிற்பாதுகாப்பு படையினர் உறுதியாக தெரிவித்து விட்டனர்.

இதற்கிடையே மலேசியாவில் இருந்து நேற்று காலை 8.55 மணிக்கு ஏர்-ஏசியா விமானம் திருச்சி வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் வெளியே செல்ல காத்து இருந்தனர். இதேபோல் அதே விமானத்தில் மலேசியா செல்ல 130 பயணிகளும் தயாராக இருந்தனர்.

அவர்களிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தி முடித்துவிட்டால் விமானத்தில் ஏறி விடலாம். ஆனால் சுங்க அதிகாரிகள் இல்லாததால் நீண்டநேரமாக பயணிகளிடம் சோதனை நடத்தப் படவில்லை. இதனால் விமானம் புறப்பட தாமதமானது. இதையடுத்து விமான நிறுவன அதிகாரிகள் அனுமதியுடன் சுங்கத்துறையினரின் சோதனையின்றி பயணிகளை ஏற்றிக் கொண்டு விமானம் புறப்பட்டு சென்றது.

இதற்கிடையே இலங்கையில் இருந்து மற்றொரு விமானம் பயணிகளுடன் நேற்று காலை திருச்சி விமானநிலையத்துக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளும் சோதனைக்காக காத்திருந்தனர். அவர்களிடமும் சோதனை நடத்த அதிகாரிகள் வரவில்லை. இதனால் விமானநிலையத்தில் நீண்டநேரமாக காத்திருந்த பயணிகள் பொறுமையிழந்து கூச்சல் போட்டனர். உடனே இதுபற்றி மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் விமானநிலைய இயக்குனர் குணசேகரனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக சுங்க அதிகாரிகளுக்கு தற்காலிக அனுமதி சீட்டு வழங்கினார்.

இதனை தொடர்ந்து சுங்க அதிகாரிகள் விரைந்து பணிக்கு சென்றனர். சோதனை செய்யப்படாமல் 130 பயணிகள் மலேசியாவுக்கு புறப்பட்டு சென்றது தொடர்பாக ஏர்-ஏசியா விமான நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு சுங்கத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் திருச்சி விமானநிலையத்தில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்