குடகனாறு அணையை தூர்வார வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

வேடசந்தூர் அருகே உள்ள குடகனாறு அணையை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-01-03 22:30 GMT
வேடசந்தூர், 

பழனிமலையில் உருவாகும் குடகனாறு ஆத்தூர், திண்டுக்கல், வேடசந்தூர் வழியாக பயணித்து கரூர் மாவட்டம் மூலப்பட்டி அமராவதி ஆற்றில் கலக்கிறது. மாங்கரையாறு, சந்தனாவர்த்தினி ஆறு, வரட்டாறு, மான்கோம்பையாறு ஆகிய சிற்றாறுகள் குடகனாற்று நீர்வரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

வேடசந்தூர் அருகே அழகாபுரியில் குடகனாற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. 15 மதகுகள் கொண்ட இந்த அணை மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 663 ஏக்கர் நிலங்களும், கரூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 337 ஏக்கர் நிலங்களும் பாசனவசதி பெறுகின்றன. மேலும் அணை நிரம்பினால் பாலப்பட்டி, காசிபாளையம், விருதலைப்பட்டி, கூவக்காபட்டி, கூம்பூர் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் அணையில் குறைந்தளவு தண்ணீர் தேங்கியிருந்தது. இந்தநிலையில் திண்டுக்கல், தாடிக்கொம்பு, வேடசந்தூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அனைத்தும் குடகனாற்றில் கலந்து அணையில் தேங்கி நிற்கிறது. இதனால் அணை தண்ணீர் மாசடைந்துள்ளது. இதுபோதாத குறைக்கு அணையின் நீர்பிடிப்பு பகுதி புதர்மண்டி காட்சியளிக்கிறது.

இந்நிலையில் அணையின் பழைய 5 மதகுகளில் பழுது ஏற்பட்டது. பின்னர் ரூ.1 கோடியே 15 லட்சத்தில் அவை பொதுப்பணித்துறையால் சரிசெய்யப்பட்டது. மேலும் மதகுகளை பாதுகாக்க அணையின் உட்பகுதியில் கரை போன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அணையில் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. எனவே அணையை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்