வேலூர் சத்துவாச்சாரியில் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள் போராட்டம்

சத்துவாச்சாரியில் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Update: 2019-01-04 23:00 GMT
வேலூர், 

வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 3-வது தெருவில் தனியார் செல்போன் நிறுவனம் மூலம் டவர் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அனுமதியும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செல்போன் டவர் அமைக்கும் பணி நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

இதைப்பார்த்த அந்தப்பகுதி பொதுமக்கள் செல்போன் டவர் அமைக்கும் பகுதிக்கு சென்று குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்கக்கூடாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “குடியிருப்பு பகுதியில் டவர் அமைத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும், எனவே இங்கு டவர் அமைக்கக்கூடாது” என்றனர். அதற்கு செல்போன் நிறுவனம் அனுமதிபெற்றுதான் டவர் அமைப்பதாகவும், எனவே சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்கமுடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதனால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பொதுமக்களை போலீசார் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பிவைத்தனர். இந்த போராட்டம் காரணமாக சிறிது நேரம் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்