சத்துவாச்சாரியில் தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது கார்மோதி காயம் அடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி பலி சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை

சத்துவாச்சாரியில் தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது கார்மோதி படுகாயமடைந்த பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். தொடர் விபத்துகளை தடுக்க சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Update: 2019-01-04 22:15 GMT
வேலூர், 

வேலூர் சத்துவாச்சாரியில் கெங்கையம்மன் கோவில் பகுதியில் இருந்து ஆர்.டி.ஓ. அலுவலக சாலைக்கு செல்ல சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து தான் செல்லவேண்டும். தேசிய நெடுஞ்சாலை என்பதால் அதில் வரும் வாகனங்கள் அசுரவேகத்தில் செல்கின்றன. அதேநேரத்தில் இந்த பகுதியில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் சாலையை கடந்து செல்கின்றனர்.

அப்போது வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதனால் தேசியநெடுஞ்சாலையை கடக்க சுரங்கப்பாதை அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பேரில் கடந்தசில வருடங்களுக்கு முன்பு சுரங்கப்பாதை அமைக்க பூமிபூஜை போடப்பட்டது. ஆனால் பலவருடங்களாகியும் சுரங்கப்பாதை அமைக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இந்த இடத்தில் பள்ளி மாணவி ஒருவர் கார்மோதி பலியாகி உள்ளார். சத்துவாச்சாரி நேருநகரை சேர்ந்தவர் ராஜா டீ மாஸ்டர். இவருடைய மகள் தமிழ்செல்வி (வயது 14) சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து சென்றபோது தேசியநெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மாணவி தமிழ்செல்வி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கெங்கையம்மன் கோவில் பகுதியில் இருந்து ஆர்.டி.ஓ. அலுவலக சாலைக்கு செல்ல சுரங்கப்பாதை அமைக்காததால்தான் விபத்து ஏற்படுவதாகவும், தொடர் விபத்துகளை தடுக்க உடனடியாக சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்