கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் துணிகரம்: தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை, பணம் கொள்ளை

கிருஷ்ணகிரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-01-04 22:45 GMT
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரியில் புதிய வீட்டு வசதி வாரியம் அருகில் சத்யசாய் நகரில் குடியிருந்து வருபவர் பெருமாள். இவர் பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள நகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கீதா பாப்பாரப்பட்டி நகராட்சி பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். நேற்று அவர்கள் வழக்கம் போல பள்ளிக்கு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து பெருமாள் வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த 1½ லட்சம் ரூபாய், 25 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை. மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. கொள்ளை போன நகைகள், பணத்தின் மொத்த மதிப்பு ரூ. 8 லட்சம் எனக்கூறப்படுகிறது.

இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் பெருமாள் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதே போல கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.

வீட்டின் மாடி வழியாக கொள்ளையர்கள் உள்ளே இறங்கி கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொள்ளை தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்