நத்தம்-துவரங்குறிச்சி இடையே 4 வழிச்சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

நத்தம்-துவரங்குறிச்சி இடையே 4 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-01-04 22:30 GMT
திண்டுக்கல், 

நத்தம்-துவரங்குறிச்சி இடையே புதிதாக 4 வழிச்சாலை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், 4 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று திண்டுக்கல் சென்னமநாயக்கன்பட்டியில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) அலுவலகத்துக்கு வந்தனர்.

பின்னர், அந்த அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். இதையடுத்து உள்ளே இருந்த மாவட்ட வருவாய் அலுவலர் ரமேசை சந்தித்து, தங்களது நிலத்தை கையகப்படுத்த ஆட்சேபனை தெரிவித்து தனித்தனியாக மனு கொடுத்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

நத்தம்-துவரங்குறிச்சி இடையே ஏற்கனவே சாலை உள்ளது. அந்த சாலையை அகலப்படுத்தாமல், புதிதாக வேலம்பட்டி, நடுமண்டலம், சேத்தூர், சிரங்காட்டுப்பட்டி, அழகாபுரி, ஐக்கியம்பட்டி, துவரங்குறிச்சி ஆகிய 7 வருவாய் கிராமங்கள் வழியாக 27 கிலோ மீட்டருக்கு 4 வழிச்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

இதன்மூலம் 500 ஏக்கர் விவசாய நிலங்களும், அதிலுள்ள தென்னை, மா, புளிய மரங்கள், நெல் வயல்கள் மற்றும் கிணறுகள் அடியோடு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த புதிய சாலையால் நத்தம் சுற்றுவட்டார மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கிரிக்கெட் மைதானத்துக்கு விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் வேகமாக வந்து செல்வதற்கு வசதியாகவே 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது.

எனவே புதிய சாலை அமைப்பதற்கு பதிலாக ஏற்கனவே உள்ள மதுரை-துறையூர் சாலையை 4 வழிச்சாலையாக மாற்றினால் பல கோடி ரூபாய் அரசு பணம் மிச்சமாகும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நத்தத்தில் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதைத்தொடர்ந்து தங்களது ஆட்சேபனை மனுக்களை கலெக்டர் அலுவலகத்திலும் கொடுத்தனர்.

மேலும் செய்திகள்