நாகை மாவட்டத்தில் 35 ஆயிரம் பேருக்கு சமையல் எரிவாயு இணைப்பு அதிகாரி தகவல்

நாகை மாவட்டத்தில் 35 ஆயிரம் பேருக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-04 21:45 GMT
நாகப்பட்டினம், 

மத்திய அரசின் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நாகையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் திருச்சி மண்டல உதவி மேலாளர் பத்மாசிவராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இண்டேன் கியாஸ் உரிமையாளர்கள் செந்தில், ஜெகன், வினோபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை பகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பை திருச்சி மண்டல உதவி மேலாளர் பத்மா சிவராமகிருஷ்ணன் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதம மந்திரியின் உஜ்வாலா யோஜனா திட்டத்தை 2016-ம் ஆண்டு முதல் மத்திய அரசு தொடங்கியது. தற்போது இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு ஏழை பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பை மத்திய அரசு வழங்கி வருகிறது. 2020-ம் ஆண்டுக்குள் சுமார் 8 கோடி பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 6 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் நாகை மாவட்டத்தில் 35 ஆயிரத்து 786 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இணைப்புகளை பெறுவதற்கு குடும்ப அட்டை, ஆதார் கார்டு, வங்கி கணக்கின் புத்தகம் ஆகியவற்றை கொண்டு சென்று அருகே உள்ள சமையல் எரிவாயு விற்பனையாளரிடம் கொடுத்து இந்த திட்டத்தில் இலவச சமையல் எரிவாயு பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்