வீட்டில் சிலைகள் கைப்பற்றப்பட்ட வழக்கு, தொழில்அதிபர் கிரண்ராவ் திருச்சி போலீசில் ஆஜராகி கையெழுத்து

வீட்டில் சிலைகள் கைப்பற்றப்பட்ட வழக்கில் தொழில்அதிபர் கிரண்ராவ் திருச்சி போலீசில் ஆஜராகி கையெழுத்து போட்டார்.

Update: 2019-01-04 23:00 GMT
திருச்சி, 

சென்னை கோபாலபுரத்தை சேர்ந்தவர் வினோத் ஆர்சேத்தி. இவருடைய மனைவி கிரண்ராவ்(வயது 54). தொழில்அதிபரான இவருடைய வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது பூமிக்கடியில் புதைத்து வைத்து இருந்த புராதன சின்னங்கள், உலோகம், கற்சிலைகள், தூண்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் கைப்பற்றினர். பின்னர் இது தொடர்பான வழக்கில் கிரண்ராவை சிலை கடத்தல் பிரிவு போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆனால் அவர் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி, திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், வழக்கு நடைபெறும் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜராகி உத்தரவாத ஜாமீன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கடந்த 21-ந் தேதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நேற்று முன்தினம் ஆஜரானார். அங்கு அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கிரண்ராவ் நேற்று காலை திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு வந்தார். அங்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரசேகர் முன்னிலையில் கையெழுத்திட்டார். பின்னர் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 

மேலும் செய்திகள்