ஓசூர் பகுதிகளில் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

ஓசூர் பகுதிகளில் பல்வேறு திட்ட பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2019-01-05 22:15 GMT
ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியத்திற்குட்பட்ட நல்லூர் மற்றும் பாலிகானபள்ளி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றும் வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் கிராம கணக்குகளை, மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக, நல்லூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் நொச்சி செடி, புங்கன், வேம்பு, பூவரசன், சில்வர்ஹோக் உள்ளிட்ட செடிகள் உற்பத்தி செய்யும் பணிகளை பார்வையிட்டார்.

பின்னர் அவர், நாற்றாங்கால்கள் தரமானதாக நடவு செய்து நல்ல மரக்கன்றுகள் உருவாக்கும் வகையில் செடிகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்றும், இச்செடிகளை அந்தந்த ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு வழங்கி அனைத்து ஊராட்சிகளிலும் மரக்கன்றுகள் நடவு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பின்னர், பாலிகானபள்ளி ஊராட்சி அலுவலகத்தில் கிராம கணக்குகளான பொது நிதி பயன்பாடு, திட்ட நிதி, மின்சார கட்டணம் செலுத்திய விவரங்கள், குடிநீர் கட்டணங்கள் உள்ளிட்டவற்றை கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து குடிநீர் திட்ட பணிகள், தெருவிளக்கு பயன்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கலெக்டர் பிரபாகர் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது, ஊரக வாழ்வாதார திட்ட அலுவலர் உமாமகேஸ்வரி, ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சென்னகிருஷ்ணன், விமல் ரவிக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டென்சிங், பாலகிருஷ்ணன், ஊராட்சி செயலர்கள்் விஷ்ணு குமார், சந்திரப்பா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்