மாவட்டம் முழுவதும் அனுமன் ஜெயந்தி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2019-01-05 23:00 GMT
நாமக்கல், 


ராசிபுரம் ஸ்ரீதேவி பூதேவி சமேத பொன்வரதராஜ பெருமாள் கோவிலின் உபகோவிலான மண்டபப்படி ஸ்ரீஅபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று காலை நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணியளவில் வேத பாராயணம், சுதர்சன ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், காயத்ரி ஹோமம், மந்திர புஷ்பம், தீபாராதனை நடந்தது. காலை 6 மணிக்கு மூலவர், உற்சவர், சிறப்பு திருமஞ்சனம் அலங்காரம், கூட்டுப் பிரார்த்தனை, மஹா தீபாராதனை நடந்தது.

ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது அபயஹஸ்த ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் நவமாருதி நண்பர்கள் குழு சார்பில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. உற்சவர் திருவீதி உலா நடந்தது.

ராசிபுரம் டவுன் சேலம் ரோட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அதிகாலை முதல் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பக்தர் கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை வழிபட்டனர். அப்போது சாமி வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் சேலம் ரோட்டில் புதிய கோர்ட்டு அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலிலும் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அனைத்து கோவில்களிலும் ராசிபுரம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

குமாரபாளையத்தில் உள்ள லட்சுமி நாராயணர் - காசி விஸ்வேஸ்வரர் கோவிலுக்கு இடையில் 21 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். நேற்று அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்ச நேயருக்கு துளசி மாலை, வண்ண பட்டாடை அணிவித்து அலங்காரம் செய்திருந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி இசைக்குழுவினரின் நாதஸ்வர இசைநிகழ்ச்சி நடைபெற்றது.

இதேபோல பாண்டுரங்கர் கோவில், ராமர் கோவில் ஆகிய கோவில்களில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு சர்க்கரைப்பொங்கல், புளியோதரை, வடை ஆகிய பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் சாமியின் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மோகனூரில் அனுமன் ஜெயந்தியையொட்டி மோகனூர் வெங்கட்ரமண பெருமாள் கோவில் முன்புறம் உள்ள பக்த அனுமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று 508 வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேந்தமங்கலம் அருகே உள்ள நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் அடிவாரத்தில் வீற்றிருக்கும் பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் அனுமனை வழிபட்டு சென்றனர்.

இதேபோல மாவட்டம் முழுவதும் பல்வேறு கோவில் களில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்