அனுமன்ஜெயந்தியை யொட்டி மூலை அனுமாருக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

அனுமன்ஜெயந்தியையொட்டி தஞ்சை மூலை அனுமாருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2019-01-05 22:30 GMT
தஞ்சாவூர்,


அனுமன்ஜெயந்தியையொட்டி நேற்று ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தஞ்சை மேலவீதியில் பிரதாப வீர ஆஞ்சநேயர் (மூலை அனுமார்) கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அயநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

மூலை அனுமார் வாலில் சனீஸ்வர பகவான் உள்பட நவகிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். ராமாயணத்தில், ராவணனால் சிறைபிடிக்கப்பட்டு பெரும் துன்பத்திற்கு ஆளான நவகிரகங்களை தன்பலத்தால் விடுதலையாக்கியவர் அனுமார். இதன் பலனாக தனக்கோ, தன் பக்தர்களுக்கோ யாதொரு தீங்கும் செய்ய மாட்டோம் என நவகிரகங்களிடம் சத்தியபிரமாணம் பெற்றவர் மூலை அனுமார். இவரை வழிபடுபவர்களுக்கு பயம் நீங்கி ஆற்றலும், மேன்மையும் பெற்று செல்லும் இடங்களில் எல்லாம் வெற்றியை தரக்கூடியவர் என்பது வரலாறு.


தியாகராஜசுவாமிகள் வழிபட்ட இந்த தலத்தில் மார்கழி மாதத்தில் 1008 ராம நாமம் உச்சரித்து 108 முறை கோவிலில் வலம் வந்து வழிபட்டால் எந்த பலனை வேண்டி வழிபடுகிறார்களோ, அவற்றை எல்லாம் பெறலாம். மேலும் கிரக தேர்‌ஷங்களும நீங்கி உயிருக்கு ஆபத்தான நோய்களும் குணமாகும் என்பது ஐதீகம்.

இத்தகைய புகழ்பெற்ற தஞ்சை மூலை அனுமார் கோவிலில் அனுமன்ஜெயந்தியையொட்டி காலை 10 மணிக்கு தேங்காய்துருவல், பால், மஞ்சள், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டும் அபிஷேகம் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு 4 வீதிகளிலும் சாமி புறப்பாடு நடைபெற்றது.

இதே போல் தஞ்சை ரெயிலடியில் உள்ள ஆஞ்சநேயர், கல்லணைக்கல்வாயில் உள்ள ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல்வேறு ஆஞ்சநேயர் கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்