ராசிபுரம் அருகே பட்டணத்தில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் புதிய மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு

ராசிபுரம் அருகே, பட்டணத்தில் புதிய மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-05 22:00 GMT
ராசிபுரம்,

ராசிபுரம் அருகேயுள்ளது பட்டணம் பேரூராட்சி. இங்குள்ள ராசிபுரம் - புதுப்பட்டி சாலையில் கிராம நிர்வாக அலுவலகம் அருகில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் புதிதாக அரசு மதுபானக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வந்தனர்.

இந்த நிலையில் அந்தப் பகுதியில் புதிதாக அரசு மதுபானக் கடை திறந்தால் பள்ளி மாணவர்கள், கால்நடை ஆஸ்பத்திரிக்கு வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், மேலும் அந்தப் பகுதியில் குடியிருப்புகள் அதிகம் இருப்பதாகவும், துணை சுகாதார நிலையம், நூலகம் இருப்பதால் மதுபானக் கடை திறந்தால் தேவையில்லாமல் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்றும் கூறி பொதுமக்கள் நேற்று காலை திடீரென சாலை மறியல் செய்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் பூபதி, சுப்பிரமணியம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இது பற்றி டாஸ்மாக் அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. அவர்கள் அளித்த தகவலின் பேரில் தற்போது உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்தில் கடை திறக்கப்படமாட்டாது என போலீசார் சாலை மறியல் செய்தவர்களிடம் தெரிவித்தனர்.

அதன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் காரணமாக ராசிபுரம்-புதுப்பட்டி சாலை யில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்