சத்தியமங்கலம், குருக்களையாப்பட்டியில் நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்; 7 பேர் கைது

சத்தியமங்கலம், குருக்களையாப்பட்டியில் நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-01-05 23:00 GMT
அன்னவாசல்,

அன்னவாசல் ஒன்றியம் சத்தியமங்கலம் ஊராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு புயல் நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக டோக்கன் வழங்கப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில், சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டு தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்துள்ளோம். தங்கள் பகுதிக்கு அரசு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொது மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளனூர் போலீசார் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து பொது மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை-திருச்சி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் அன்னவாசல் ஒன்றியம் குருக்களையாப்பட்டி அருகே நிவாரண பொருட்கள் வழங்ககோரி பொதுமக்கள் புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்