கள்ளக்காதலி மாயமான விவகாரம்: போலீஸ் விசாரணைக்கு பயந்து என்ஜினீயர் தற்கொலை - சின்னசேலம் அருகே பரபரப்பு

கள்ளக்காதலி மாயமான விவகாரத்தில் போலீஸ் விசாரணைக்கு பயந்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-01-05 23:04 GMT
சின்னசேலம்,

சின்னசேலம் அருகே கள்ளக்காதலி மாயமான விவகாரத்தில் போலீஸ் விசாரணைக்கு பயந்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வி.கிருஷ்ணாபுரம் கிழக்கு காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் ராமர்(வயது 52). இவருடைய மனைவி ராஜாத்தி. இவர்களுக்கு செந்தில்ராஜா(30), ரமேஷ்(27) ஆகிய 2 மகன்களும், மகேஷ்வரி(20) என்ற மகளும் உள்ளனர். என்ஜினீயரான ரமேசுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமான 23 வயதுடைய இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றி அறிந்த ரமேசின் பெற்றோர் அவரை கண்டித்தனர். இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரமேஷ் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றார்.

பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரமேஷ் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். இதற்கிடையே ரமேசின் கள்ளக்காதலி திடீரென மாயமானார். இது பற்றி அந்த இளம்பெண்ணின் மாமனார், கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், ரமேஷ் என்னுடைய மகன் வீட்டில் இருந்த 16 பவுன் நகை மற்றும் ரூ.80 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு, எனது மருமகளையும் கடத்தி சென்று விட்டதாக கூறியிருந் தார். அதன்பேரில் போலீசார், ரமேசை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர் அப்போது ரமேஷ், அந்த பெண்ணை தான் கடத்தவில்லை என்றும், நகை, பணத்தை எடுக்கவில்லை என்றும் கூறினார். இதையடுத்து அவரை போலீசார் விடுவித்தனர். மனமுடைந்த நிலையில் ரமேஷ் வீட்டுக்கு வந்தார். போலீசார் தன்னை விசாரணைக்காக மீண்டும் அழைப்பார்கள் என பயந்த அவர், வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ரமேசை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே ரமேசின் உறவினர்கள் கீழ்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு சென்றனர். போலீஸ் விசாரணைக்கு பயந்து தான் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறி, அங்கிருந்த போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் விரைந்து வந்து ரமேசின் உறவினர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராமர் கீழ்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலி மாயமான விவகாரத்தில் போலீஸ் விசாரணைக்கு பயந்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்