தைப்பூசம் தொடங்க உள்ளதையொட்டி பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்

தைப்பூச திருவிழா தொடங்க உள்ளதையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவியத்தொடங்கியுள்ளனர். நேற்று பழனிக்கு வந்த பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2019-01-05 23:40 GMT
பழனி,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி முருகன் கோவில் விளங்குகிறது. இங்கு வருகிற 15-ந்தேதி தைப்பூச திருவிழா தொடங்குகிறது. பிரசித்தி பெற்ற இந்த திருவிழாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக வருவார்கள்.

திருவிழா தொடங்க சில நாட்களே உள்ள நிலையில் பழனிக்கு பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று மதுரை மற்றும் நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து திரளான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்தனர். இவர்களில் 40-க்கும் மேற்பட்டோர் அலகு குத்தி கிரிவீதியை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதில் மதுரை மாவட்டம் கோச்சடையை சேர்ந்த முருகன் என்ற பக்தர் மட்டும் 20 அடி நீள அலகு குத்தி கிரிவீதியை வலம் வந்து நேர்த்திக்கடனை செலுத்தினார். மற்ற பக்தர்கள் 10 அடி முதல் 15 அடி நீளம் வரை உள்ள அலகுகளை குத்தி வந்தனர்.

கிரிவீதியில் பக்தர்கள் கூட்டம் இருந்த போதிலும், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தியவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க போலீசார் இடவசதியை ஏற்படுத்திக்கொடுத்தனர். இதற்கிடையே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கட்டண தரிசனம், பொது தரிசனங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்