சபரிமலை விவகாரம்: கேரள அரசை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-01-06 23:45 GMT

புதுச்சேரி,

சபரிமலை அய்யப்பன் கோவில் புனிதத்தை கெடுக்கும் விதமாக கேரள மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் கம்யூனிஸ்டு அரசும், முதல்–அமைச்சரும் செயல்பட்டு வருவதாக பா.ஜ.க. குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் கேரள அரசை கண்டித்து புதுவை மாநில பா.ஜ.க. பிற்படுத்தப்பட்டோர் பிரிவு சார்பில் நேற்று காலை ரெட்டியார்பாளையம் ஜவகர்நகர் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் பொதுச்செயலாளர் அகிலன் தலைமை தாங்கினார். பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. மாநில நிர்வாகிகள் இளங்கோவன், நாகராஜன், லட்சுமி, ரத்தினவேல், கோபி, புகழேந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்தின் போது அவர்கள் அய்யப்பசாமியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அதனை கையில் வைத்திருந்தனர். கேரள முதல்–அமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர். அப்போது அவர்கள் திடீரென பினராயி விஜயன் உருவ படத்தை தீவைத்து எரிக்க முயற்சி செய்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி பினராயி விஜயன் படங்களை போராட்டகாரர்களிடம் இருந்து பறித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்