ஆதனூர்-குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் ரூ.400 கோடியில் ரெகுலேட்டர்கள் அமைக்கும் பணி

ஆதனூர்-குமார மங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் ரூ.400 கோடியில் ரெகுலேட்டர்கள் அமைக்கும் பணி மே மாதம் தொடங்கும் என்று திருச்சி மண்டல தலைமை பொறியாளர் செந்தில் குமார் கூறினார்.

Update: 2019-01-07 23:00 GMT
திருப்பனந்தாள்,

ஆதனூர்-குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.400 கோடியில் ரெகுலேட்டர்கள் அமைக்கப்படும் என கடந்த 2014-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்கான நிதியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆண்டு(2018) ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் பொதுப் பணித்துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் செந்தில்குமார் நேற்று குமாரமங்கலத்தில் ரெகுலேட்டர்கள் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அணைக்கரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடலூர் மாவட்டம் ஆதனூருக்கும், நாகை மாவட்டம் குமாரமங்கலத்துக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றில் ரூ.400 கோடியில் ரெகுலேட்டர்கள் அமைக்கப்பட உள்ளது. இதனால் நாகை, கடலூர் மாவட்டங்களில் மேலும் ஒரு லட்சம் ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறும். அதே நேரத்தில் 20 கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

மழையால் வெள்ளம் ஏற்படும்போது இந்த ரெகுலேட்டர்கள் மூலம் 6 டி.எம்.சி. தண்ணீரை கடலில் கலக்காமல் தடுத்து இருபுறமும் பிரித்து அனுப்ப முடியும்.

ரெகுலேட்டர்கள் மேல் மக்கள் பயன்பாட்டுக்காக இருவழிப்பாதையும் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளுக்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துவிட்டது. வருகிற மே மாதத்தில், ரெகுலேட்டர்கள் அமைக்கும் பணி தொடங்குகிறது. 2 ஆண்டுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, ரெகுலேட்டர்கள் பயன்பாட்டுக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் ஆசைத்தம்பி, உதவி பொறியாளர்கள் யோகேஸ்வரன், முத்துமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்