கடைகளில் கட்டை பைகள் பறிமுதல் நகராட்சி அலுவலகத்தை வணிகர்கள் முற்றுகை

கடைகளில் பயன்படுத்தப்பட்ட கட்டை பைகளை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் வணிகர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2019-01-07 23:00 GMT
பெரம்பலூர்,

தமிழகம் முழுவதும் கடந்த 1-ந் தேதி முதல் மறு சுழற்சி செய்ய இயலாத 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் நகர் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறார்களா? என்று நேற்று மதியம் பெரம்பலூர் நகராட்சி ஆணையர் வினோத் தலைமையில், அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது பெரம்பலூர் கடைவீதியில் உள்ள கடைகளுக்கு சென்று அங்கு பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களையும், கட்டை பைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து சரக்கு வாகனத்தில் ஏற்றினர்.

அப்போது வணிகர்கள் எங்களிடம் கட்டை பைகள் பயன்படுத்தக்கூடாது என்று நகராட்சி நிர்வாகம் முன்கூட்டியே கூறவில்லை என்று நகராட்சி ஆணையர் வினோத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நகராட்சியின் சார்பில் நடத்தப்பட்ட இந்த திடீர் சோதனை சிறிது நேரத்தில் முடிவடைந்ததால் சோதனை என்கிற பெயரில் கண் துடைப்பு நாடகத்தை நடத்தி விட்டு சென்றதாக வணிகர்கள் குற்றம் சாட்டினர்.

கட்டை பைகளை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகளை கண்டித்து அனைத்து வியாபாரிகளின் கூட்டமைப்பான பெரம்பலூர் மாவட்ட வணிகர் நலச் சங்கத்தை சேர்ந்தவர்கள் நகராட்சி அலுவலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்டனர். இந்நிலையில் நகராட்சி ஆணையர், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததால், பின்னர் அங்கு சென்ற வணிகர்கள், நகராட்சி ஆணையர் வினோத்தை சந்தித்து பேசினர். அப்போது அவரிடம் வணிகர்கள் கட்டை பைகளை பயன்படுத்தக்கூடாது என நகராட்சி நிர்வாகம் எங்களுக்கு தெளிவு படுத்தவில்லை. எனவே பறிமுதல் செய்யப்பட்ட கட்டை பைகளை திருப்பி ஒப்படைக்குமாறு கூறினர். அப்போது நகராட்சி ஆணையர் வினோத் இன்று (செவ்வாய்க்கிழமை) மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியை சந்தித்து இது தொடர்பாக முறையிடுமாறு கூறியதை தொடர்ந்து வணிகர்கள் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்