நிவாரண பொருட்கள் வழங்ககோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

அன்னவாசல் அருகே புயல் நிவாரண பொருட்கள் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-01-07 22:45 GMT
அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் திருவேங்கைவாசல் ஊராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு புயல் நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக டோக்கன் வழங்கப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் கஜா புயலால் பாதிப்பு அடையாத பெரும்பாலான குடும்பங்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது என்றும், வருவாய்த்துறையினர் முறையாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என்றும் கூறி அப்பகுதி பொதுமக்கள் குருக்களையாப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தாசில்தார் சோனை கருப்பையா, கிராம நிர்வாக அதிகாரி ரவி, திருக்கோகர்ணம் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்