வீரகனூரில் மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

வீரகனூரில் அரசு மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊர்பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2019-01-07 22:12 GMT
சேலம்,

கெங்கவல்லி அருகே வீரகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராயர்பாளையம் கிராமத்தில் புதிதாக அரசு மதுபானக்கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மதுக்கடை அமைத்தால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனக்கூறி அதேபகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர், பேனரை எடுத்துக்கொண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மனு கொடுக்க வந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உடனடியாக அவரிடம் இருந்து பேனரை பறிமுதல் செய்தனர். அப்போது, அவருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து அவர், ராயர்பாளையம் கிராமத்தில் மதுக்கடை அமைக்கக்கூடாது என வலியுறுத்தி கலெக்டர் ரோகிணியிடம் மனு அளித்தார்.

இதுகுறித்து தினேஷ் கூறுகையில், எங்களது கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு நடுவில் அரசு மதுபானக்கடை அமைய உள்ளதாக தெரிகிறது. இதனை அறிந்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து வாக்காளர் அடையாள அட்டைகளில் கையொப்பமிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிர்ப்பு மனுக்களை அனுப்பினோம். ஆனால் இதுவரை அந்த மனுவின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாய நிலத்தில் மதுக்கடை அமைத்தால் மதுபிரியர்கள் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபடுவார்கள். இதுதவிர குற்ற சம்பவமும் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே, பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன்கருதி அரசு மதுபானக்கடை அமைவதை தடுத்து நிறுத்த வேண்டும், என்றார்.

இதேபோல், சேலம் அருகே மேட்டுப்பட்டி எம்.பெருமாபாளையத்தை சேர்ந்த பொன்னம்மாள் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த பெண்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க திரண்டு வந்தனர். அப்போது அவர்களை போலீசார் அங்கேயே தடுத்து நிறுத்தினர். வாழப்பாடி மற்றும் காரிப்பட்டி போலீசார் எங்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்து வருவதாகவும், எனவே, சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொன்னம்மாளின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஆனால் அவர்களை போலீசார் மனு கொடுக்க அனுமதி அளிக்கவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த பெண்கள் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்