வேப்பனப்பள்ளி அருகே துணிகரம் 2 கோவில்களில் உண்டியலை உடைத்து கொள்ளை மதுக்கடை, மளிகை கடைகளிலும் திருட முயற்சி

வேப்பனப்பள்ளி அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதேபோல் மதுக்கடை மற்றும் மளிகை கடையிலும் திருட முயற்சி நடந்துள்ளது.

Update: 2019-01-08 22:00 GMT
வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ளது கடவரப்பள்ளி. இதன் அருகில் உள்ள காரகுப்பத்தில் பச்சை மலை முருகன் கோவில் உள்ளது. சுமார் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் நேற்று முன்தினம் வழக்கம் போல பூஜைகள் நடந்தன. இரவு பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை கிராமமக்கள் கோவில் வழியாக சென்ற போது உண்டியல்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அங்கு வந்த கிராமக்கள் பல்வேறு இடங்களில் உண்டியல்களை தேடினர். அப்போது மர்ம நபர்கள் இரவு கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 2 உண்டியல்களை பெயர்த்து எடுத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து உள்ளனர். பின்னர் உண்டியல்களை கோவிலின் அருகில் உள்ள காட்டில் வீசி சென்றது தெரியவந்தது.

இதேபோல வேப்பனப்பள்ளியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிராமமக்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர். இதுகுறித்து பொதுமக்கள் வேப்பனப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

2 கோவில்களிலும் இருந்த உண்டியல் பணம், பக்தர்கள் செலுத்திய தங்க நகைகள், அம்மனுக்கு அணிவித்திருந்த 3 தாலி சங்கிலி உள்ளிட்டவை கொள்ளை போனது தெரியவந்தது உள்ளது. இவற்றின் மதிப்பு குறித்து போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர். இது தொடர்பாக வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

வேப்பனப்பள்ளி பகுதியில் மதுக்கடை உள்ளது. இந்த கடையில் மர்ம நபர்கள் கம்பிகளை உடைத்து திருட முயன்றுள்ளனர். இதே போல அருகில் உள்ள மளிகை கடையிலும் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். மதுக்கடை மற்றும் மளிகை கடைகளில் பொருட்கள், பணம் கொள்ளை போகவில்லை. வேப்பனப்பள்ளி பகுதியில் 2 கோவில்களில் கொள்ளை மற்றும் மதுக்கடை, மளிகை கடைகளில் திருட முயற்சி சம்பவங்கள் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்