சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு: வீராணம் ஏரி மதகில் திடீர் உடைப்பு

வீராணம் ஏரி கரை உள்வாங்கி, மதகில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் சேத்தியாத்தோப்பு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2019-01-08 22:45 GMT
சேத்தியாத்தோப்பு,

கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. இதன் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும் வகையில் ஏரியில் 34 பாசன மதகுகள் அமைந்துள்ளது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையையும் ஏரி பூர்த்தி செய்து வருகிறது.

47.50 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் நேற்று 46.90 அடியில் நீர்மட்டம் இருந்தது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக வினாடிக்கு 243 கனஅடி நீர் ஏரிக்கு வந்து கொண்டு இருந்தது. மேலும் சென்னையின் குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 74 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது 220 கனஅடி நீர் பாசனத்திற்கும், வி.என்.எஸ். மதகு வழியாக 90 கனஅடி நீர் வெள்ளாற்றிலும் திறந்து விடப்பட்டுள்ளது.

இதில் சேத்தியாத்தோப்பு அருகே வாழைக்கொல்லை கிராம பகுதியில் உள்ள ஒரு மதகு மூலம் அப்பகுதியை சேர்ந்த விளை நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. நேற்று மதியம் 12 மணிக்கு அந்த மதகு அமைந்துள்ள இடத்தின் வழியாக செல்லும் ஏரிக்கரையில் செல்லும் காட்டுமன்னார்கோவில்-சேத்தியாத்தோப்பு சாலை திடீரென உள்வாங்கியது. சிறிது நேரத்துக்கு பின்னர் மதகு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, அதில் இருந்து தண்ணீர் வெளியேற தொடங்கியது. இதை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியன், செயற்பொறியாளர் காமராஜ், பொறியாளர்கள் ஞானசேகரன், பார்த்தீபன் மற்றும் பணியாளர்கள் விரைந்து வந்து, மதகு பகுதியை பார்வையிட்டு அங்கு மணல் மூட்டைகள், ஜல்லி கற்கள் மற்றும் டிராக்டரில் மண் கொண்டு வந்து கொட்டியும் உடைப்பை அடைத்து, கரையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே வீராணம் ஏரி மதகு உடைந்து கரையில் உடைப்பு ஏற்பட போவதாக அந்தபகுதி மக்களிடையே காட்டுத்தீ போல் தகவல் பரவியது. இதனால் அங்கு ஏராளமானவர்கள் குவிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால், இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர். வீராணம் ஏரியில் தற்போது 46.90 அடி நீர்மட்டம் உள்ளது. இதனால் நீர் அழுத்தம் காரணமாக மேலும் அதிகளவில் தண்ணீர் வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் ஏரியில் உள்ள தண்ணீர் இருப்பை குறைப்பதற்கான முயற்சியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு மூலம் வெள்ளாற்றில் அதிகளவில் தண்ணீரை திறந்து விட முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்