வால்பாறையில் பட்டப்பகலில் தேயிலைத்தோட்டத்தில் காட்டுயானைகள் முகாம்

வால்பாறையில் பட்டப்பகலில் தேயிலை தோட்டத்தில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன.

Update: 2019-01-08 22:45 GMT
வால்பாறை, 

வால்பாறை பகுதியில் பனிப்பொழிவு அதிகரித்து வருவதால் வனப்பகுதியில் உள்ள நீரோடை, ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள காட்டுயானைகள் தண்ணீர் தேடியும், உணவு தேடியும் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றன.

இவ்வாறு இடம்பெயரும் காட்டுயானைகள் வால்பாறை தேயிலை தோட்ட பகுதியில் ஆங்காங்கே முகாமிட்டு வருகின்றன.

இதனால் தேயிலை தொழிலாளர்கள் தேயிலை இலையை பறிக்க முடியாமல் தொடர்ந்து அவதியடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஸ்டேன்மோர் எஸ்டேட், சவரங்காடு ஆகிய எஸ்டேட் பகுதிகளில் காட்டுயானைகள் 3 குட்டியுடன் முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகின்றன. தற்போது இந்த யானைகள் லோயர்பாரளை எஸ்டேட் தேயிலைத் தோட்டத்திற்கு அருகில் முகாமிட்டுள்ளன.

தேயிலை தோட்ட பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் தேயிலை பறிக்கும் பணி முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது. வால்பாறை பகுதியில் வனச்சரகர் சக்திகணேஷ் உத்தரவின்பேரில் வனவர் சபரீஸ்வரன் தலைமையில் வேட்டைத்தடுப்பு காவலர்கள் யானைகள் கூட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையில், வால்பாறை அருகே உள்ள பெரியகல்லார் எஸ்டேட் பகுதி குடியிருப்புக்குள் நள்ளிரவில் காட்டுயானைகள் புகுந்தன.

பின்னர் அங்கு சைனுதீன் என்பவரின் மளிகைக்கடையின் கதவுகளை உடைத்து துதிக்கையை உள்ளே விட்டு பொருட்களை கொட்டு நாசப்படுத்தின.

சத்தம் கேட்டு வந்த அந்த பகுதி மக்கள் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

வனப்பகுதியில் வறட்சி காரணமாக யானைகள் இடம்பெயர்ந்து வருவதால் எஸ்டேட் பகுதி மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் வால்பாறை, மானாம்பள்ளி வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்