ராசிபுரத்தில் தலைமை ஆசிரியர் வீட்டில் நகை, பணம் திருட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

ராசிபுரத்தில் தலைமை ஆசிரியர் வீட்டில் 6 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் திருட்டு போனது. இது தொடர்பாக ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் நேரில் விசாரணை நடத்தினார்.

Update: 2019-01-08 23:00 GMT
ராசிபுரம், 

ராசிபுரம் டவுன் வி.நகர்-7 பகுதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவரது மகன் ஸ்ரீதரன் (வயது 56). இவர் புதுச்சத்திரம் அருகேயுள்ள காரைக் குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர் வெண்ணந்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் கோகிலஸ்ரீ. இவர் எம்.பி.பி.எஸ். முடித்துள்ளார். இவர் தற்போது தேர்வுக்காக சென்னையில் தங்கி படித்து வருகிறார்.

தலைமை ஆசிரியர் ஸ்ரீதரன் மற்றும் அவரது மனைவி இருவரும் மகளை பார்த்து வர கடந்த 5-ந் தேதி சென்னைக்கு சென்றனர். நேற்று காலையில் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அவர்கள் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது பீரோ திறந்த நிலையில் கிடந்ததை கண்டனர். பொருட்கள் சிதறிக்கிடந்தன. சுற்றுச்சுவர் வழியாக வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் செயின், 1 பவுன் பிரேஸ்லெட், 2 பவுன் 2 மோதிரங்கள், ரொக்கம் ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். திருடர்கள் கவரிங் நகைகளை அப்படியே போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். மர்ம நபர்கள் நகைகள் திருடிய பீரோவின் அருகில் திறந்த நிலையில் இருந்த இன்னொரு பீரோவில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

இது பற்றி தகவல் அறிந்த ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். தலைமை ஆசிரியர் வீட்டில் திருடிய மர்ம நபர்களை ராசிபுரம் போலீசார் தேடி வருகின்றனர்.

தலைமை ஆசிரியரின் வீடு குடியிருப்பு பகுதிகள் நிறைந்துள்ள இடம். ஆனாலும் திருடர்கள் சாமர்த்தியமாக உள்ளே புகுந்து நகைகளை திருடிச்சென்று உள்ளனர். வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாததால் திருடர்களை அடையாளம் காண முடியவில்லை. இது போன்ற திருட்டு சம்பவங்களை தடுக்க பொதுமக்களிடம் போலீசார் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், வெளியூர் செல்லும்போது போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் போன்ற கருத்துக்களை போலீசார் தெரிவித்தும் பொதுமக்களின் அஜாக்கிரதையால் இது போன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்