திருவண்ணாமலையில் வாலிபர் கொலை: மகனை கொன்றதற்கு பழி தீர்க்கவே ஆட்களை வைத்து கொலை செய்தேன் சரணடைந்த பெண் பரபரப்பு வாக்குமூலம்

மகனை கொன்றதற்கு பழி தீர்க்கவே ஆட்களை வைத்து திருவண்ணாமலையில் வாலிபரை கொலை செய்தேன் என்று சரணடைந்த பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2019-01-08 23:30 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலையை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 28). இவர் சென்னையில் வேலை செய்யும்போது நெசப்பாக்கத்தை சேர்ந்த மஞ்சுளா (37) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இது மஞ்சுளாவின் மகன் ரித்தேஷ் (10) மூலம் அவரது கணவருக்கு தெரியவர அவர்களது கள்ளக்காதலுக்கு தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் மஞ்சுளாவின் மகன் ரித்தேசை கொலை செய்தார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நாகராஜ் ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து நாகராஜ் திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 29-ந் தேதி 5 பேர் கொண்ட கும்பல் நாகராஜை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

இதுதொடர்பாக திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மஞ்சுளா, கள்ளக்காதலன் நாகராஜை ஆள் வைத்து கொலை செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மஞ்சுளா மற்றும் சூளைமேட்டை சேர்ந்த தினேஷ்குமார், அரும்பாக்கத்தை சேர்ந்த ஷியாம்சுந்தர், சந்தோஷ்குமார், சரவணன் ஆகியோர் சென்னை கோர்ட்டில் சரணடைந்தனர்.

மேலும் தலைமறைவாக இருந்த சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த சஞ்சீவி (19) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். சென்னை கோர்ட்டில் சரண் அடைந்த மஞ்சுளா உள்பட 5 பேரையும் கடந்த 4-ந் தேதி திருவண்ணாமலை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு (எண்-1) கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் அவர்கள் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோர்ட்டில் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் 5 பேரையும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய மாஜிஸ்திரேட்டு விக்னேஷ்பிரபு அனுமதி அளித்தார்.

காவலில் எடுத்த மஞ்சுளா உள்பட 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசில் மஞ்சுளா கொடுத்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

மஞ்சுளாவுக்கும், நகராஜிக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதற்கு தடை ஏற்பட்டது. இதற்கு காரணமான மஞ்சுளாவின் மகன் ரித்தேசை நாகராஜ் கடத்தி சென்று கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சுளா நாகராஜை கொலை செய்ய முடிவு செய்தார். முதலில் இதற்காக ஒரு கும்பலிடம் கள்ளத்துப்பாக்கி ஒன்றை வாங்கி உள்ளார். ஆனால் அவர்கள் மஞ்சுளாவிற்கு பொம்மை துப்பாக்கியை கொடுத்து ஏமாற்றி உள்ளனர். கள்ளத் துப்பாக்கி வாங்கிய விவகாரத்தில் மஞ்சுளா சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்தார்.

பின்னர் மஞ்சுளா அவருக்கு பழக்கமான வாலிபர்கள் மூலம் நாகராஜை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார். மகனை கொடூரமாக கொலை செய்ததற்கு பழி தீர்க்கவே நாகராஜை ஆட்களை வைத்து கொலை செய்துள்ளார். இதற்கு பல லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் பணம் கைமாறவில்லை என்று தெரிகிறது. மஞ்சுளாவிற்கும் கொலையில் ஈடுபட்டு உள்ள வாலிபர்களுக்கும் என்ன உறவு, எதற்காக அவர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்