விழுப்புரம் அருகே வாகனங்களில் கடத்த முயன்ற 1,536 மதுபாட்டில்கள் பறிமுதல்

விழுப்புரம் அருகே வாகனங்களில் கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-01-08 22:45 GMT
விழுப்புரம்,

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை வாங்கி, விழுப்புரம் அருகே உள்ள லிங்காரெட்டிப்பாளையம் பகுதிக்கு கொண்டு வந்து அங்கிருந்து வாகனங்களில் ஏற்றிக்கொண்டு வெளியூர்களுக்கு கடத்திச்செல்வதாக மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி, ஏட்டுகள் குமரன், வெங்கடேசன் ஆகியோர் லிங்காரெட்டிப்பாளையத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் அங்கிருந்த கார் மற்றும் சரக்கு வாகனத்தை போலீசார் சோதனை செய்ததில் அந்த வாகனங்களில் 1,536 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் உள்பட 2 பேர் சேர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து 2 வாகனங்களிலும் ஏற்றிக்கொண்டு வெளியூருக்கு கடத்திச்செல்ல இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், சரக்கு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய பன்னீர்செல்வம் உள்பட 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்