திருச்செந்தூர் அருகே பரிதாபம் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை அரசு வேலை கிடைக்காத விரக்தியில் விபரீத முடிவு

திருச்செந்தூர் அருகே அரசு வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-01-09 22:00 GMT
திருச்செந்தூர், 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கீழ நாலுமூலைக்கிணறு முருகன்குறிச்சியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் பாரத் (வயது 25), சுரேஷ் (24) ஆகிய 2 மகன்கள் உண்டு. இதில் சுரேஷ் எம்.ஏ. பொருளாதாரம் படித்து இருந்தார். இவர் அரசு வேலையில் சேர்வதற்காக, பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதி வந்தார். ஆனாலும் அவருக்கு அரசு வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் இருந்தார்.

இசக்கிமுத்து, அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான ஊர் காத்தான் என்பவரது வீட்டை பராமரித்து வந்தார். ஊர் காத்தான் தன்னுடைய குடும்பத்தினருடன் வெளியூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் சுரேஷ், ஊர்காத்தான் வீட்டில் சென்று, தனது லுங்கியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இசக்கிமுத்து, இரவில் ஊர் காத்தானின் வீட்டில் மின்விளக்கு சுவிட்சை போடுவதற்காக சென்றார். அப்போது அங்கு தன்னுடைய மகன் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்து அலறினார். அங்கு அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் திரண்டனர். அவருடைய உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

தற்கொலை செய்த சுரேஷின் உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், அரசு வேலை கிடைக்காத விரக்தியில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

அரசு வேலை கிடைக்காத விரக்தியில், பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்