திருச்சி ஜங்ஷன் ரெயில்நிலையம் முன்பு உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலை அகற்ற நோட்டீஸ்

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலை அகற்ற நோட்டீஸ் அனுப்பியதை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Update: 2019-01-09 23:00 GMT
திருச்சி,

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு ரெயில்வே இடத்தில் தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. மூலவராக அம்மன் சன்னதியும், விநாயகர், முருகன், கால பைரவர், ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, மூனிஸ்வரர், கருப்புசாமி, நாகம்மாள் ஆகிய உப சன்னதிகளும், நவக்கிரகங்களும் அமைந்துள்ளன. இந்த கோவிலை ரெயில்நிலையத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் (போர்ட்டர்கள்) சேர்ந்து நடத்தி வருகின்றனர். இக்கோவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது.

ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். ரெயில் நிலையத்திற்கு தினமும் வந்து செல்லும் பயணிகள் இக்கோவிலில் வழிபாடு நடத்தி செல்வார்கள். விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில் ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதால் தேவி கருமாரியம்மன் கோவிலை அகற்ற சம்பந்தப்பட்டவர்களுக்கு திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கோவில் உள்ள இடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோவிலை அகற்றக்கூடாது என வலியுறுத்திவருகின்றனர். கோவிலை அகற்ற உத்தரவிட்ட திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகளை கண்டித்து இந்து அமைப்பினர் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். கோவிலை அகற்றக்கூடாது என கோவில் தரப்பினரும் ரெயில்வே நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். இல்லையென்றால் மாற்று இடம் வழங்க கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு ரெயில்வே நிர்வாகம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோவிலை அகற்ற நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்