ஈரோடு மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம் - வங்கிகளில் ரூ.1,200 கோடி வர்த்தகம் பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கிகளில் ரூ.1,200 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

Update: 2019-01-09 23:01 GMT
ஈரோடு,

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் சட்டங்களை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும். குறைந்தபட்ச கூலியாக மாதம் ரூ.18 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்திலும் 2-வது நாளாக நேற்றும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு நிறுவனங்களான தபால் அலுவலகம், எல்.ஐ.சி. அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் தபால் அனுப்பும் பணிகள் பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பல்வேறு துறை அலுவலகங்கள் மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகம், தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் வங்கி ஊழியர்களும் கடந்த 2 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகள் வெறிச்சோடின. சுமார் ரூ.1,200 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. மேலும், கடந்த 2 நாட்களாக வங்கி பணிகள் முழுமையாக முடங்கியதால், இன்று (வியாழக்கிழமை) வங்கிகளில் வழக்கத்தை விட கூட்ட நெரிசல் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்