அரசு உதவித் தொகை பெறும் போலி மாற்றுத் திறனாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் குறைத்தீர்வு கூட்டத்தில் கோரிக்கை

அரசு உதவித்தொகைபெறும் போலி மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறைதீர்வுநாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்தனர்.

Update: 2019-01-10 23:00 GMT

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் பேசுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு பசுமை வீடு திட்டம் ஒதுக்கீடு செய்து மாவட்ட அலுவலர்கள் பரிந்துரை செய்தாலும் ஒன்றியம், ஊராட்சி அலுவலகங்களில் அலைக்கழிக்கின்றனர். மாற்றுத்தினாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் வேலையை தொடர்ந்து அனைத்து நாட்களிலும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு கழிப்பறை கட்ட ரூ.12 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதி போதாததால், கழிப்பறை கட்ட கூடுதல் நிதி வழங்க வேண்டும்.

அரசு பஸ்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி இருக்கை ஒதுக்க வேண்டும். போலி மாற்றுத்திறனாளிகள் சிலர் அரசு உதவித் தொகை பெற்று வருகின்றனர். இதனால் அரசு திட்டங்கள் உண்மையான மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை கிடைக்க தாமதம் ஏற்பாடுகிறது. போலி மாற்றுத் திறனாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடன் வேண்டி வங்கிக்கு செல்லும் மாற்றுத் திறனாளிகளை வங்கி ஊழியர்கள் அலைக்கழிக்கின்றனர். வங்கிகளில் மாற்றுத்திறனாளிகளை அலைகழிக்காமல் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூறினர்.

இதற்கு பதிலளித்து கலெக்டர் பேசுகையில், மாற்றுத்திறனாளிகளின் குறைகளை நிவர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இருப்பினும் சிலரின் கோரிக்கைகள் நிவர்த்தி செய்ய முடியாமல் இருக்கலாம். தங்களின் கோரிக்கைகள் குறித்து தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் முதியோர் உதவித் தொகைக்காக ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். முதியோர் உதவித் தொகை சம்பந்தப்பட்டவர்களுக்கு வங்கி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. வரும் மாதத்தில் இருந்த 80 வயதிற்கு மேல் உள்ள முதியவர்களுக்கு மணியார்டர் மூலம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் ரே‌ஷன் கடைகளில் மாற்றுத் திறனாளிகள் வரிசையில் நின்று பொருட்கள் வாங்காமல் உடனடியாக பொருட்கள் வாங்க வழிவகை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். மேலும் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளிடம் கலெக்டர் மனுக்களை பெற்று கொண்டார்.

மேலும் செய்திகள்