நாகர்கோவில் இந்திராகாலனி பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

நாகர்கோவில் இந்திரா காலனி குடியிருப்புகளை காலிசெய்யக்கூறி ரெயில்வே நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியதால், அப்பகுதி பொதுமக்கள் மாற்று இடம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2019-01-10 23:00 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் வடிவீஸ்வரம் பறக்கிங்கால் அருகே உள்ள இந்திராநகரில் 60–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ரெயில்வே துறையின் விரிவாக்க பணிக்காக இந்த குடியிருப்புகளை காலி செய்யுமாறு ரெயில்வே நிர்வாகம் சார்பில் அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் தங்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி மாவட்ட கலெக்டரிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் இந்த மனுக்கள் தொடர்பாக இதுவரை மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இந்திராநகர் மக்கள் கூறுகிறார்கள்.

இந்தநிலையில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி (விடுதலை) மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமையில் இந்திராநகர் பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் தங்களுக்கு மாற்று இடம் வழங்குவது தொடர்பாக அதிகாரிகள் ஒரு முடிவுக்கு வரும்வரை  உள்ளிருப்பு போராட்டம் நடத்த போவதாகக்கூறி கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

இந்த உள்ளிருப்பு போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நேசமணிநகர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அந்தோணிமுத்து, இந்திராநகர் பகுதியை சேர்ந்த ஜெகன் உள்ளிட்டோரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் தங்களது பிரச்சினைக்கு தீர்வு காண கலெக்டரை சந்தித்து பேசும் வரை கலைந்து செல்லமாட்டோம் எனக்கூறினர்.

இதையடுத்து போலீசார், அவர்களை கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க அழைத்துச் சென்றனர். ஆனால் கலெக்டர், அனைத்து துறை அலுவலர்களுடனான கூட்டம் ஒன்றில் பங்கேற்றதால், மாலை 3.30 மணிக்கு  சந்திப்பதாக தெரிவித்தார். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

அதன்பிறகு மீண்டும் அவர்கள் மாலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து மனு கொடுத்தனர். அதற்கு கலெக்டர் மாற்று இடம் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்