டேங்கர் லாரிகளுக்கு கொள்ளளவு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய தொழிலாளர் துறை பெண் அதிகாரி கைது

டேங்கர் லாரிகளுக்கு கொள்ளளவு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய தொழிலாளர் துறை பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2019-01-10 23:00 GMT
சூலூர்,

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த பாப்பம்பட்டி பிரிவு ராமையாநகரில் தெய்வம் கார்ப்பரேஷன் அக்யூரசி என்ற தனியார் ஆய்வு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தை, அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 55) நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில், தனியார் எரிவாயு டேங்கர் லாரிகள், டேங்கரின் மொத்த கொள்ளளவு ஆகியவற்றை ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்து சான்றிதழ் பெறுவது அவசியம். இங்கு தினந்தோறும் ஏராளமான லாரிகள் டேங்கரின் கொள்ளளவை ஆய்வு வந்து செல்கின்றன. இங்குள்ள டேங்கர் லாரிகளின் கொள்ளளவை மாவட்ட தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் விஜயலட்சுமி (57) நேரில் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கி வந்தார்.இந்த நிலையில், நேற்று ஆறு டேங்கர் லாரிகள் கொள்திறன் ஆய்வுக்காக இந்த நிறுவனத்துக்கு வந்தது. அந்த லாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்க விஜயலட்சுமி, லாரி ஒன்றுக்கு ரூ.1000 முதல் ரூ.2 ஆயிரம் வரை நிர்ணயம் செய்து மொத்தம் ரூ.11 ஆயிரத்து 200 லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று ஆய்வு நிறுவன உரிமையாளரிடம் கேட்டதாக தெரிகிறது.

மேலும் தனக்கு வெளியில் வேலை இருப்பதாகவும், திரும்ப வருவதற்குள் பணத்தை ஏற்பாடு செய்து கொடுக்கும்படி கூறிவிட்டு விஜய லட்சுமி சென்றார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத நிறுவன உரிமையாளர் பன்னீர்செல்வம் இது குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில், அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்து இருந்து கண்காணித்தனர்.

இதையடுத்து மதியம் 3 மணி அளவில் பெண் அதிகாரி விஜயலட்சுமி அந்த நிறுவனத்திற்கு வந்தார். அப்போது சான்றிதழ்களில் கையெழுத்திட லஞ்சமாக பணம் கேட்டார். உடனே பன்னீர்செல்வம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ரசாயனம் பூசப்பட்ட பணத்தை அவரிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து வந்து பெண் அதிகாரி விஜயலட்சுமியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் ராஜேஷ் கூறுகையில், மாவட்ட தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் விஜயலட்சுமி பெயரில் பல ஊழல் புகார்கள் வந்தது. தனியார் ஆய்வு நிறுவன உரிமையாளர் பன்னீர்செல்வத்திடம் லஞ்சம் வாங்கிய போது பெண் அதிகாரி விஜயலட்சுமி கையும், களவுமாக சிக்கிக்கொண்டார். அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கடந்த மாதம் இதே நிறுவனத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்றது தெரியவந்துள்ளது என்றார்.

விஜயலட்சுமியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்திய போது, மாவட்ட தொழிலாளர் துறை இணை ஆணையர் ராஜசேகர் அங்கு வந்து விசாரணை நடத்தினார். விஜயலட்சுமி தனது கணவருடன் கோவை கணபதியில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்